ஜனாதிபதி வடக்கில் சுதந்திரமாக நடக்க மகிந்தவே காரணம்: நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி அதிரடிப் பேச்சு!

Archuna 1

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வட மாகாணத்தில் சுதந்திரமாக நடைபயிற்சி மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே வழிவகுத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்று (20) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தார். “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று வடக்கில் அச்சமின்றி நடைபயிற்சி செய்கிறார் என்றால், அதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே காரணம். அவரை இந்த அரசாங்கம் கடவுளாக நினைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

நாட்டில் ஜே.வி.பி (JVP) தான் இனவாதத்தைப் பரப்பி வருவதாகவும், ஜனாதிபதி வடக்குக்கு வந்து இனவாதத்தைத் தூண்டுவதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மக்கள் ஜனாதிபதியைத் தமிழ் மக்களின் பிரபாகரன் போலச் செயல்படுவார் என நம்பி வாக்களித்தனர். ஆனால் அவர் வடக்கிற்கு வந்து பொங்கல் கொண்டாடுகிறாரே தவிர, பலாலியில் உள்ள காணிகளை விடுவிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

தெற்கில் உள்ளவர்கள் இனவாதத்தைப் பரப்பவே வடக்குக்கு வருவதாக ஜனாதிபதி அண்மையில் குறிப்பிட்டிருந்த கருத்தை அர்ச்சுனா எம்.பி திட்டவட்டமாக மறுத்தார். வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் இந்தப் பேச்சு, சபையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

 

 

Exit mobile version