இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன இறக்குமதி உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன்படி நாட்டில் சமீபத்திய சொகுசு உயர் ரக வாகன இறக்குமதியில் Mercedes-Benz முதலிடத்தில் உள்ளது. இதற்கமைய மொத்தமாக 28 புதிய Mercedes-Benz வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 போர்ஷேக்கள் ((Porsche)), 4 பென்ட்லிகள் (Bentley), மற்றும் ஒரு லம்போர்கினி (Lamborghini)ஆகிய வாகனங்களும் இதில் உள்ளடங்குகின்றது.
அத்துடன் பயன்படுத்தப்பட்ட (Pre-owned) வாகன பிரிவின் முன்னணியிலும் Mercedes-Benz உள்ளது. மொத்தம் 54 pre-owned Benz வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 18 C-Class, 13 E-Class, 1 S-Class மற்றும் 12 GLB மொடல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் பிற சொகுசு வாகனப் பிரிவுகளில் Audi வாகனங்கள் 37 பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக A3 மொடல்கள் 28 இடம்பெற்றுள்ளன. அத்துடன் Lexus வாகனங்கள் 15 பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், BMW வாகனங்கள் 17 பதிவு செய்யப்பட்டுள்ளன.
மொத்த வாகனப் பதிவுகள் 380 ஆக இருந்தபோது, அதில் பெரும்பாலானவை ரூ. 5 மில்லியனுக்கும் குறைவான விலையில் விற்கப்படும் BAW (263) மற்றும் Wuling (79) வாகனங்களாகும்.
இந்தநிலையில் மொத்தமாக 4,025 மின்சார வாகனங்கள் (EVs) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய 115 மின்சார SUV வாகனங்கள் (EVs) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் GAC – 46 மற்றும் Changan – 30 வாகனங்கள் அடங்கும். BYD வாகனங்கள் 27 பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ATTO-2 மொடல் மட்டும் 19 உள்ளது.
இருசக்கர மின்சார வாகனப் பதிவுகள் 3,478 ஆகும். இதில் Yadea வாகனங்கள் 1,799 ஆக இருந்து ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தநிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அரசாங்கத்தின் வருவாய் ரூ.154.5 பில்லியனால் அதிகரித்துள்ளது.
இதில் 63.6% வாகன இறக்குமதியிலிருந்து வந்த வருவாய் என மதிப்பிடப்படுகிறது.
இதற்கமைய செப்டெம்பர் மாதத்தில் சொகுசு வாகன இறக்குமதி மூலம் அரசாங்கத்திற்கு ரூ 98 பில்லியன் (9,800 கோடி) வரி வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.