அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன், இன்று (நவம்பர் 17) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அருகம் விரிகுடா பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம், குறித்த இளைஞன் அநாகரீகமாக நடந்து கொண்டதாக அப்பெண் சுற்றுலாக் காவல்துறைப் பிரிவில் முறைப்பாடு அளித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, நேற்று (நவம்பர் 16) பிற்பகல் சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர், களவாஞ்சிகுடி எல்லை வீதிப் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய திருமணமானவர் என்று சுற்றுலா காவல்துறைப் பிரிவு தெரிவித்துள்ளது.

