வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபர்கள் குறித்த பல விபரங்கள் வெளியாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணை அதிகாரிகள் கூற்றுப்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் கொலையுடன் தொடர்புடைய மற்றொரு நபர் குறித்து ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் 4 காவல்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
விசாரணையில் CCTV மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. சி.சி.டி.வி காட்சிகளின்படி உந்துருளியின் இலக்கத் தகடுகள் தெளிவாகத் தெரியாததால், அவற்றின் உரிமையாளர்களை இதுவரை கண்டறிய முடியவில்லை என விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
துப்பாக்கிதாரியும், உந்துருளியின் ஓட்டுநரும் இன்னும் தென் மாகாணத்திலேயே பதுங்கியிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
இதன் காரணமாக, இன்று (அக் 26) தென் மாகாணம் முழுவதும் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை காவல்துறை மேற்கொண்டது.