கோட்டாவின் அழைப்புக்கு வாலாட்டும் கூட்டம் நாங்கள் அல்லர் – ஜே.வி.பி சீற்றம்

WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM

அமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது. அத்துடன், இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை தமது போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளது.

ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போதே அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க,மேற்படி அறிவிப்பை கட்சியின் சார்பில் விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அமைச்சர்களின் இராஜினாமா என்பது அரசியல் நாடகமாகும். இரவு 12 மணிக்கு பதவி துறந்தவர்கள் மறுநாள் பகல் 12 மணிக்கு மீண்டும் அமைச்சர்களாகின்றனர். இதனை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

அதுமட்டுமல்ல பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க அமைச்சு பதவிகளை ஏற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் தற்போது அமைச்சு பதவிக்கு போட்டி நிலவவில்லை என்பதை ஜனாதிபதி புரிந்து செயற்பட வேண்டும்.

கோட்டாவின் அரசில் வாலாட்டும் கூட்டங்கள் இருக்கலாம். அந்த கூட்டம் அமைச்சு பதவிக்கு கட்டுப்படலாம். நாம் அவ்வாறானவர்கள் அல்லர். எனவே, கோட்டாவின் அழைப்பை நிராகரிக்கின்றோம். கோட்டா அரசு பதவி விலக வேண்டும். அதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version