பார்வையாளர்கள் வருகையில் சரிவு: ரிதியகம சஃபாரி பூங்கா மற்றும் பின்னவல மிருகக்காட்சி சாலையை மக்கள் புறக்கணிப்பு!

Pinnawala 01

தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றுக்கு அதிகளவிலான பார்வையாளர்கள் வருகை தந்த போதிலும், இலங்கையின் ஒரே சஃபாரி பூங்காவான ரிதியகம சஃபாரி பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள பின்னவல மிருகக்காட்சி சாலை ஆகியவற்றுக்கான பார்வையாளர் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு 1,023,091 பார்வையாளர்கள், பின்னவல யானைகள் சரணாலயத்துக்கு 650,013 பார்வையாளர்கள் வருகை தந்துள்ள போதும், ரிதியகம சஃபாரி பூங்காவுக்கு 209,500 பார்வையாளர்கள், பின்னவல மிருகக்காட்சி சாலைக்கு 302,627 பார்வையாளர்கள் மாத்திரமே வருகைத் தந்துள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, ரிதியகம சஃபாரி பூங்கா மற்றும் பின்னவல மிருகக்காட்சி சாலை ஆகியவற்றுக்கு பார்வையாளர்கள் வருகை குறைவதற்கு விலங்குகளின் வரையறுக்கப்பட்ட வகைப்பாடு, கவர்ச்சிகரமான சூழல் இல்லாமை, போதுமான விளம்பரம் இல்லாமை என்பன காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறை மற்றும் புதிய திட்டங்களைத் தொடங்குவதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சிறுத்தை மற்றும் சீத்தா வலயங்களின் கட்டுமானங்கள் தடைப்பட்டுள்ளன.

இது பூங்காவின் கவர்ச்சியைத் தடுத்தது. சிறுத்தை வலயம் 2024 ஆம் ஆண்டின் செயல் திட்டத்திலும், சீத்தா வலயம் 2025 இலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரிதியகம சஃபாரி பூங்காவின் மொத்த 500 ஏக்கர் பரப்பளவில் 150 ஏக்கர் பூங்கா ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பயன்படுத்தப்படாமல் உள்ளது.

இதற்கு 2020-2022 ஆம் ஆண்டுக்கிடையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாகவே கட்டுமான தாமதம் ஏற்பட்டது.

தற்போது திட்டப்படி பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவருகிறது மேலும் விலங்குகளைப் பெறுவதற்கும், பூங்காக்களின் சூழல் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிக்க முடியும் என கணக்காய்வு அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

Exit mobile version