மணிவண்ணனிற்கு பகீரங்க ஆதரவை வெளியிட்டார் விக்கி!!

pearl one news விக்கி

நாளை யாழ் மாநகர சபைக்கு மணிவண்ணன் கொண்டுவரப்போகும் பாதீட்டிற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டுமென்று நீதியரசரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்கினேஸ்வரன் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதால் நகரபிதா வி.மணிவண்ணனை வெளியேற்றலாம் என்ற எண்ணத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை நான் அறிவேன்.

மக்கட் பிரதிநிதிகள் தங்கள் சொந்த நலன்களுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் முதலிடம் கொடுப்பதால்த் தான் இவ்வாறான சிந்தனைகள் மேலோங்குகின்றன.

யாழ் மக்களின் நலன் பற்றியோ வருங்காலம் பற்றியோ சிந்திக்காது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். மணிவண்ணன் எங்கள் கட்சி உறுப்பினர் அல்ல.

ஆனால் அவர் மக்கட் சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவர். தமிழ் மக்கள் சிந்தனையை தகுந்த விதத்தில் உள் நாட்டவர்களிடமும் வெளிநாட்டவர்களிடமும் கொண்டு செல்லக் கூடியவர்.

அவரின் திறனும் அறிவும் ஆற்றலும் ஆளுமையும் மற்றைய உறுப்பினர்கள் எத்தனை பேரிடம் இருக்கின்றது என்பதை உறுப்பினர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். வெறும் கட்சி சார்பான முரண்பாடுகளால் ஒரு தகுதி வாய்ந்த நகர பிதாவை இழக்க நாங்கள் இடம் அளிக்கக்கூடாது.

இந்தக் கால கட்டம் நெருக்கடி மிக்கது. அறிவு ஆளுமை அதிகாரம் கொண்டவர்களை நாங்கள் பதவி இழக்கச் செய்தோமேயானால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டிக்க முடியாமல் போய்விடும்.

எனக்கு மணிவண்ணனைத் தனிப்பட்ட முறையில் அதிகம் தெரியாது. ஆனால் அவரின் செயல்கள் பேச்சுக்கள் அவரை எனக்கு அடையாளப்படுத்தியுள்ளன.

தயவு செய்து பதவியில் இருக்கும் நகரபிதாவை கட்சிக் காரணங்களுக்காக வெளியேற்றாதீர்கள் என்று சகல யாழ் மாநகர சபை உறுப்பினர்களிடமும் அன்பான கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றேன். என்றுள்ளது.

 

 

#SrilankaNews

Exit mobile version