வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர், தனது இரண்டு சிறுநீரகங்களைத் தானம் செய்ததன் மூலம் இருவரின் உயிரைக் காப்பாற்றி மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தத் தகவல் குறித்து யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரன் என்ற 27 வயதான இளைஞன்.
திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அவர், முதலில் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காகக் கடந்த டிசம்பர் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் சி.டி. ஸ்கான் உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தலையில் ஏற்பட்ட காயம் கடுமையான வீக்கம் மற்றும் உள் இரத்தக் கசிவுகளை ஏற்படுத்தியிருந்தது உறுதியானது. இதனையடுத்து, அவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துச் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தின் தாக்கத்தைத் தாங்க முடியாமல், அவரது மூளைச் செயற்பாடுகள் படிப்படியாகக் குறைந்து, இறுதியில் மூளை இறப்பு (Brain Death) உறுதிசெய்யப்பட்டது.
இளைஞனின் மரணச் செய்தி அவரது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களின் குடும்பத்தினர் அவரது இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன்வந்தனர்.
இதையடுத்து, மரணமடைந்த இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு நேற்று (டிசம்பர் 12) வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை மூலம் அகற்றியது.
அகற்றப்பட்ட அந்த இரண்டு சிறுநீரகங்களும் இரண்டு நோயாளிகளுக்கு மாற்றுச் சிறுநீரகமாக வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டன.
உயிரிழந்த இளைஞனுக்குச் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்தே வைத்தியர் குழாமால் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.