இலங்கை உட்பட இந்திய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுக்கு, அமெரிக்கா இரண்டாம் நிலை பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இந்த பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளன.
சிக்கன் குன்யா நோய் பரவல் காரணமாக, இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையை தவிர, சோமாலியா, மொரிஷியஸ், மயோட் மற்றும் ரீயூனியன் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்தப் பயண ஆலோசனை அமலில் உள்ளதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் இயக்குநர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸைப் பரப்பும் கொசுக்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தவும், நீண்ட கை சட்டைகள் மற்றும் நீண்ட ஆடைகளை அணியவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.
முக்கிய கர்ப்பிணி பெண்கள் அந்தப் பகுதிகளுக்கு பயணம் செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிக காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, அரிப்பு மற்றும் சோர்வு ஆகியவை அறிகுறிகளில் அடங்கும் எனவும் இது நரம்பு மற்றும் இதயத்தை பாதித்து மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும் என பயண ஆலோசனையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.