டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை நிலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், யுனிசெப் (UNICEF) அமைப்பு பாரிய அளவிலான போஷணைப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கான மக்கள் தங்குமிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். இந்தச் சூழலில், போதிய உணவு கிடைக்காத காரணத்தால் 6 மாதக் குழந்தைகள் முதல் 5 வயது வரையிலான சிறுவர்கள் மத்தியில் மந்தபோஷணை நிலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
இதனைத் கருத்திற் கொண்டு, சிறுவர்களுக்கு அவசியமான BP-5 எனும் 25,000 கிலோகிராம் (25 மெற்றிக் தொன்) போஷணைப் பதார்த்தங்களை யுனிசெப் வழங்கியுள்ளது. கொழும்பிலுள்ள யுனிசெப் அலுவலக அதிகாரிகள், இந்தப் பொருட்களைச் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
இந்த உதவித் திட்டத்தின் மூலம் அனர்த்தப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களின் போஷணைத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

