தங்கள் இருப்புக்காகவும், கெளரவ வாழ்வுக்காவும், பிறப்புரிமை அடிப்படையிலான சுதந்திரத்துக்காகவும், தங்களின் தாயக விடுதலைக்காகவும் ஈழத் தமிழர்கள் ஆயுத வழியில் நடத்திய போராட்டங்களை வன்முறை சார்ந்த பயங்கரவாதம் என தென்னிலங்கை அரசு புறமொதுக்கினாலும், தமிழர்களைப் பொறுத்தவரை அது ஒரு வீரகாவிய வரலாறு.
அதில் தோன்றிப் பளிச்சிட்ட விடிவெள்ளிகள் பலர். தமது இனத்துக்காகத் தங்கள் உயிரையே ஈகம் தந்த பல்லாயிரம் விடுதலைப் பேராளிகளைத் தன் இருப்புக்கும் நிலைப்புக்குமாக அர்ப்பணித்தவள் தமிழ்த் தாய்.
அந்த அன்னையின் வீரகாவியம் படைத்த தமிழ் மறவர்களில் மூத்தவராக விளங்குபவர் தியாகி பொன். சிவகுமாரன். அவரின் 48ஆவது நினைவு தினம் இன்றாகும்.
போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதற்காக எதிரியிடம் உயிருடன் சிக்காமல் இருக்கும் விதத்தில் தன்னுயிரையே தற்கொடையாகக் கொடுக்கும் தியாகத்தை ஈழத் தமிழரின் விடுதலைப் போரட்டத்தில் முன்மாதிரியாகக் காட்டிச் சென்றவர் தியாகி சிவகுமாரன்.
இலங்கைத் தீவின் வடக்கிலும், கிழக்கிலும் காலாதிகாலமாக நிலைத்திருக்கும் தமிழர் தேசத்தை அடியோடு அழித்து, நிர்மூலமாக்குவதுதான் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஆட்சிக்கு வந்த சகல பெளத்த, சிங்களப் பேரினவாத அரசுகளினதும் மேலாதிக்க வெறிக் கொள்கையாக இருந்து வருகின்றது. இந்தத் தாயகத்தில் தமிழர்கள் ஒன்றுபட்ட ஒரு தேசிய இனக்கட்டமைப்பாக தழைத்துக் காலூன்றி நிற்பதற்குக் காரணமான அடிப்படைக் கட்டுமானங்களை – அடித் தளங்களை தேடித் தேடி அழிப்பதன் வாயிலாக, தமிழர் தேசத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்குவதேசிங்களத்தின் ஒரே திட்டமாகவும் செயற்பாடாகவும் இருந்து வருகின்றது.
முதலிலே தமிழரின் இருப்புக்கே ஆதாரமான மொழி உரிமை பறிக்கப்பட்டது. அதன் பின்னர் கல்வி உரிமை, வேலைவாய்ப்பு – தொழில் உரிமை என்று ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, நில உரிமையும் கூட அபகரிக்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் அவர்களின் பாதுகாப்பு உரிமையும் மறுக்கப்பட்டு, இறுதியில் வாழ்வியல் உரிமையும் துறக்கப்படும் இழி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஒடுக்குமுறைக் கட்டமைப்பு வடிவங்களில் கல்வி உரிமையைப் பறிப்பதற்கு வசதியாகக் கல்வித் தரப்படுத்தலை அறிமுகம் செய்தது அப்போதைய ஸ்ரீமாவின் அரசு. மாணவனாகவே அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர் தியாகி சிவகுமாரன்.
எழுபதுகளின் முற்பகுதிகளில் போராட்ட உணர்வும் தீவிரமும், கொண்ட தமிழ் இளைஞர்களை ஊக்குவித்து, வளர்த்து, தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றுவதற்கான புறநிலையை ஏற்படுத்திக் கொடுத்த அமைப்புகளில் தமிழ் மாணவர் பேரவை முக்கியமானது. அந்தப் புரட்சிகர மரபில் தோன்றிய முத்துத்தான் பொன். சிவகுமாரன்.
ஈழ மக்களுக்காகத் தன்னையே தற்கொடையாகக் கொடுத்த வீரமறவன் சிவகுமாரன், தன்னுயிரை ஆகுதியாக்கியது இந்த ஜூன் 5இல்தான். அன்றைய தினம் உலக சுற்றாடல் தினம் என்பதால், அதற்கு மதிப்பளிக்கும் விதத்தில், அடுத்த நாளை தியாகி பொன். சிவகுமாரனுக்கான நினைவேந்தலாக – தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக அறிவித்து, அதனை அனுஷ்டிக்கும் வழமை தமிழர் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
– ‘காலைக்கதிர்’ ஆசிரியர் தலையங்கம் (05.06.2022)