இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகத்தின் (Chemical Spray/Water Cannon Attack) போது இலங்கை பணியாளர்கள் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வெளிநாட்டுப் பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க கூடுதல் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வெளிநாட்டுப் புலம்பெயர் தொழிலாளர்களை இலக்கு வைத்து அங்குள்ள உள்ளூர் குழுக்களால் இந்த இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இலங்கைப் பணியாளர்கள் தூதரகத்துடன் தொடர்புகொண்டு தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இலங்கையர்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டுப் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் இலங்கைத் தூதரகம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இரசாயன நீர்த்தாரைப் பிரயோகம் தொடர்பில் 13 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட 05 பேர் இஸ்ரேல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறான தாக்குதல்களின் பின்னர் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்குப் பின்வரும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன:
அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர். பணம் அனுப்புவதற்கு தனித்து செல்லாது, குழுவாகப் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் பயணங்களின் போது பெறுமதியான பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.