ஆரியகுளத்தில் எந்த மத அடையாளங்களுக்கும் இடமில்லை! – யாழ். மாநகர சபை விடாப்பிடி!!

Ariyakulam 960x600 1

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் பரிபாலிக்கப்படும் ஆரியகுளத்தினுள் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்குமாறு படைத்தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை யாழ். மாநகர சபை நிர்வாகம் நிராகரித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமையும், இன்று திங்கட்கிழமையும் வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற நிலையில் நேற்று யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட படை அதிகாரி ஒருவர் ஆரியகுளத்தினுள் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கையை முன்வைத்தார். எனினும் ஆரியகுளம் பகுதியில் எந்தக் காலத்திலும், எந்த மத அடையாளங்களையும் காட்சிப்படுத்த அனுமதிப்பதில்லை என யாழ். மாநகர சபையில் கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் தீர்மானம் இயற்றப்பட்டிருப்பதனால், சபை அனுமதி இல்லாமல் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்க முடியாது என ஆணையாளர் தெரிவித்ததாக்க் கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஆணையாளருடன் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ஆரியகுளத்தினுள் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்குமாறும், தவறும் பட்சத்தில் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் மாநகர சபையைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்ததையடுத்து யாழ். மாநகர சபை உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்று ஆணையாளரினால் நிகழ்நிலையில் நடாத்தப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் விடுமுறையில் வெளிநாடு சென்றிருப்பதனால், பிரதி முதல்வர் து.ஈசன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மாநகர முதல்வரும் வெளிநாட்டிலிருந்தவாறே கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

வெசாக் கொண்டாடப்படும் திகதி நிர்ணயிக்கப்பட்ட ஒரு தினம் ஆகையால் போதிய கால இடைவேளையில்லாமல் வெசாக் தினத்தன்று, அதுவும் தொலைபேசி வாயிலாக அனுமதி கோரப்பட்டமை உறுப்பினர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், முறையான எழுத்து மூல அனுமதி கோரப்படுமிடத்து அதுபற்றி பரிசீலிக்கலாம் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இது பற்றி வடக்கு மாகாண ஆளுநருக்கும், உள்ளூராட்சி ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version