தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்மென புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் என்.ரவிக்குமார் கேட்டுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை ஒருசில நீதிமன்றம் தடைவிதித்திருந்தபோதும் ஒருசில நீதிமன்றங்கள் அனுஷ்டிப்பதற்கு அனுமதியளித்தன. எது எவ்வாறாக இருந்தாலும் நீதிமன்றம் தீர்ப்புகளை புறக்கணித்து மாவீரர் தினம் அனுஷ்டித்திருந்தமையை காணமுடிந்தது.
இதேநேரம் முள்ளிவாய்க்கால் மாவீரர் நிகழ்வுக்கான செய்திகளை சேகரிக்கச் சென்ற தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் அங்கிருந்த இராணுவ முகாமில் கடமை புரிந்த இராணுவ வீரரால் தாக்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. வல்வட்டித்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சுலக்சன் என்பவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு செய்தி சேகரிக்க சென்றபோது அங்கு கடமைபுரியும் பொலிஸார் ஒருவரினால்
துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளை புதிய ஜனநாயக மக்கள் முன்னணி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. ஊடக சுதந்திரம் முழுமையாக பின்பற்றப்படும் இந்நாட்டில் முள்ளிவாய்க்காலில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதன் பின்னணியில் தமிழ் அரசியல் கட்சிகளோ அல்லது எதிர்க் கட்சியோ இருக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது. இது சர்வதேச அளவில் இலங்கைக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுக்கும் செயற்பாடாகும்.
எது எவ்வாறாக இருந்தாலும் அரசாங்கம் ஊடகவியலாளர்களை தாக்குபவர்களை காப்பாற்ற ஒருபோதும் முன்வரக்கூடாது.
இந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளரை தாக்கிய இராணுவ வீரர் விடயத்தில் அரசாங்கம் 24 மணி நேரத்திற்குள் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தியுள்ளது.
இதனை அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி என்ற முறையில் வரவேற் கின்றோம். இதற்காக அரசாங்கத்திற்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment