ஸ்டாலின் கைது! – யாழில் இன்றும் ஆர்ப்பாட்டம்!

20220805 102604 1

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (05) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதைக் வன்மையாக கண்டிக்கிறோம், ஜோசப் ஸ்டாலின் உட்பட ஜனநாயகப் போராட்ட செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடன் விடுதலை செய், ஸ்ரீலங்கா அரசின் பாசிசவாதத்தை எதிர்த்து நாம் தொடர்ந்தும் போராடுவோம் போன்ற பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஓகஸ்ட் 3ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், ஓகஸ்ட் 4ம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஓகஸ்ட் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version