இந்தோனேசியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை கோடீஸ்வர தொழிலதிபர்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகரான ஒனேஷ் சுபசிங்கவின் சடலம் படுகொலை செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னர் நேற்றுமுன் தினம் (1) இரவு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் விரிவான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரின் சகோதரியான அனோஷி சுபசிங்க இந்த கொலை தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேராவின் பணிப்புரையின் பேரில் விமான நிலைய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் எல்மோ மல்கம் பேட் உள்ளிட்ட பொலிஸ் குழு இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஜனவரி 20 ஆம் திகதி, விடுமுறைக்காக தனது மனைவி, மகள் மற்றும் மனைவியின் உதவியாளருடன் ஒனேஷ் இந்தோனேஷியா சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த கோடீஸ்வரரின் மனைவி மற்றும் மனைவியின் நண்பி ஆகியோர் மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவரின் 1.5 மில்லியன் டொலர் காப்புறுதி பணம் மற்றும் பில்லியன் கணக்கான சொத்துக்கள் என்பன அவரின் மரணத்திற்கு காரணம் என சிஐடியினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒனேஷ் சுபசிங்கவின் கிரெட் கார்ட், கையடக்க தொலைபேசி உட்பட பல மில்லியன் பெறுமதியான பொருட்களுடன் மனைவியும், அவரது நண்பியும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
விசாரணைகள் முன்னெடுப்பு இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிஐடியினரும், இந்தோனேசியாவில் உள்ள விசேட பொலிஸ் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a comment