நெடுந்தூரப் பேருந்துகள் (100 கிலோமீற்றருக்கு மேல் பயணிக்கும்) மாதந்தோறும் தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், இந்த ஆய்வுச் சான்றிதழை சரிபார்ப்புக்காக பேருந்தின் உள்ளே வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை பெஸ்டியன் மாவத்தை பயணிகள் பேருந்து முனையத்தில் 100 கிலோமீற்றருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகளின் தரத்தை சோதிக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமீபகாலமாக, பேருந்து விபத்துகள் அதிகரிப்பதும், அவற்றில் பல மோசமான வாகனப் பராமரிப்பு மற்றும் செயல் திறனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுவதும் குறித்து பொதுமக்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி. ஏ. சந்திரபால தெரிவித்தார்.
தற்போது பேருந்துகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்படும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிக்கடி ஆய்வு செய்வது அவசியம் என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
போக்குவரத்து அமைச்சு, ஒரு சிறப்புக் குழுவின் மூலம் ஒவ்வொரு வாகனத்திலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய முக்கிய அம்சங்களை இறுதி செய்துள்ளது.
இனிமேல், அந்தக் குறித்த பட்டியலின் அடிப்படையில் சான்றளிக்கப்பட்ட நிபுணர்களால் மாதந்தோறும் ஆய்வுகள் நடத்தப்படும்.பேருந்து உரிமையாளர்கள் இந்த ஆய்வுச் சான்றிதழை பேருந்தின் உள்ளே வைத்திருக்க வேண்டும், மேலும் பயணிகள் கோரினால் அதனைப் பார்க்கும் உரிமை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.