அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: வெளியான பின்னணி

24 664ee17b22482

அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: வெளியான பின்னணி

இந்தியாவின் அஹமதாபாத்தில்(Ahmedabad) கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களில் இருவர், முறையே 38 மற்றும் 40 தடவைகளாக இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொஹமட் நுஸ்ரத், மொஹமட் நஃப்ரான், மொஹமட் ரஸ்தீன் மற்றும் மொஹமட் பாரிஸ் ஆகியோரே இந்தியாவில் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நுஸ்ரத் மற்றும் நஃப்ரான் ஆகியோரே இந்தியாவிற்கு “அடிக்கடி” பயணம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏனைய இருவரும் முதன்முறையாக இந்தியாவுக்கு சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

மே 20 அன்று கைது செய்யப்பட்ட இவர்கள் நால்வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, நுஸ்ரத் இதற்கு முன்னர் தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவராவார்.

அதே நேரத்தில் நஃப்ரான் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஸ்தீனுக்கு எதிராக குறைந்தது மூன்று போதைப்பொருள் வழக்குகள் உள்ளதாகவும், ஃபரிஸிக்கு எதிராக இலங்கையில் போதைப்பொருள் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நால்வரும், கிறிஸ்தவர்கள், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை இலக்குவைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில், அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்கும், பாகிஸ்தானில் இருந்து அவர்களை வழிநடத்திய அபுபக்கர் பக்தாதி காட்டிய வழியைப் பின்பற்றுவதற்கும் உடன்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Exit mobile version