ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கைக்கு ஆபத்து
பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக ஒட்டுமொத்த ஆசியப் பிராந்தியமும் பாதிக்கப்படலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் ஏற்றுமதியின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக மேற்கு ஆசியப் பிராந்தியம் உள்ளமையே இதற்குக் காரணமாகும்.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
கடந்த வருடம் இந்த நாட்டில் ஏற்பட்ட பெரிய வெங்காய நெருக்கடியை அடுத்து பாகிஸ்தானில் இருந்து அதிகளவு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈரான் இலங்கை தேயிலையின் பிரதான ஏற்றுமதியாளராக உள்ளது. இந்த பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் அது இலங்கைக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அதுலசிறி சமரகோன் தெரிவித்தார்.
ஏற்றுமதி இறக்குமதிக்கு கடும் நெருக்கடி நிலையை இலங்கை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நெருக்கடி நிலைமைக்கு பதிலளிப்பதில் இலங்கை மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.