இலங்கையில் 1927 ஆம் ஆண்டு முதல் மே தினம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தாலும், கடும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில் மே தின நிகழ்வுகள் இடம்பெறுவது இதுவே முதல்முறையென சுட்டிக்காட்டப்படுகின்றது.
கொரோனா பெருந்தொற்றால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மேதின கூட்டங்களையும், பேரணிகளையும், நிகழ்வுகளையும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என்பன பெருமெடுப்பில் நடத்தவில்லை. சுகாதார பாதுகாப்புக்கு மத்தியில் எளிமையான முறையில் மே தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் இம்முறையும் ‘வலிசுமந்த’ மே தினத்தையே இலங்கை காண்கின்றது.
பொருட்களின் தொடர் விலையேற்றத்தால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமக்கான மே தினத்தில்கூட விடுமுறை எடுக்காமல் – உண்பதாக இருந்தால் உழைத்தாக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய வாழ்க்கைச்சுமையை சமாளிப்பதாக இருந்தால் சம்பள அதிகரிப்பு அவசியம் என்பதை தொழிலாளர்கள் உணர்ந்துள்ள போதிலும், அவற்றை கேட்டு பெற முடியாத நிலையில் உள்ளனர். தொழில் பறிபோய்விடுமோ என்ற அச்சம் ஒருபுறம், மறுபுறத்தில் தனியார் நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுவருகின்றன. இதனால் இனிவரும் காலப்பகுதியில் பலர் தொழில்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களும் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். மூலப்பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் அதிகரித்துள்ளன. புதிய முயற்சியாளர்கள் உருவாவதும் தடைபட்டுள்ளது.
இப்படியான சூழ்நிலையிலும் அரசியல் கட்சிகளால் தமது பலத்தை காட்டுவதற்கு இம்முறை மேதின கூட்டங்களும், பேரணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
எனினும், கடந்த காலங்களைபோல பஸ்களை அனுப்புவதற்கு இம்முறை முடியாமல்போயுள்ளது. எரிபொருள் பிரச்சினை மற்றும் போக்குவரத்து கட்டணம் உணர்வு இதற்கு காரணம்.
அதேபோல பேரணிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கமுடியாத நிலையும் ஏற்பட்டது. எரிவாயு தட்டுப்பாடு பொருட்கள் விலையேற்றம் இதற்கு காரணம்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உட்பட பிரதான கட்சிகள் கொழும்பை மையப்படுத்தியே பிரதான மேதின பேரணியையும், கூட்டத்தையும் நடத்தின. ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டன.
ஆளுங்கட்சியும் பெருமெடுப்பில் அல்லாமல், ஏதோ பெயருக்கு மே தினத்தை கொண்டாடியது. சவால்களை எதிர்கொண்டு, முன்னோக்கி பயணிக்கலாம் என ஆட்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.
அதேபோல காலி முகத்திடலில் போராட்டத்தல் ஈடுபட்டு வருபவர்களால் கோட்டா கோகம விலும் மேதின நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மேதின நிகழ்வுகள் இடம்பெற்றன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது, நீதி வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களில் இறங்கினர். அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் என்பனவும் வலியுறுத்தப்பட்டது.
மலையகத்தில் இரு பிரதான தொழிற்சங்கங்கள், இம்முறை மே தின பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்தவில்லை. சிறு அளவிலான கூட்டங்களே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன .
#SriLankaNews