சீனாவின் கடற்படைத் தளமாகும் ஆபத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம்!
சீனாவின் அடுத்த கடற்படைத் தளத்திற்கு சிறந்த தேர்வாக இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கலாம் என்று அமெரிக்க அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட எய்ட்டேட்டா(AidData) ஆராய்ச்சித் திட்ட ஆய்வின்படி, 2.19 பில்லியன் அமெரிக்க டொலர்களை, சீனா ஏற்கனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு முதலீடு செய்துள்ள நிலையில், இந்தத் துறைமுகம் ஒரு கடற்படைத் தளத்திற்கான வாய்ப்புள்ள இடமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயத்தை அமெரிக்காவில் உள்ள சாஸ்பெரி பல்கலைகழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கீதா பொன்கலன் தெளிவு படுத்தியிருந்தார்.
அதில் முக்கியமாக சீனா தமது கடல்சார் திறன்களை விரிவுபடுத்த இலங்கை ஒரு முக்கிய மையப்புள்ளியாக காணப்படும் என தெரிவித்திருந்தார்.
எனினும் எந்தவொரு வெளிநாட்டு ஆயுதப் படைகளையும் இலங்கையில் செயற்படவைக்கும் வசதியை அனுமதிக்கப் போவதில்லை என்று கொழும்பு கூறியுள்ள நிலையிலேயே இந்த ஆய்வு அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க அறிக்கையின்படி, தனது கடல்சார் திறன்களை விரிவுபடுத்த சீனா முயல்வதால், எதிர்வரும் ஆண்டுகளில் சீன கடற்படைத் தளத்தை நடத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஈக்குவடோரியல், கினியா, பாகிஸ்தான் மற்றும் கெமரூனில் உள்ள தளங்கள் அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் சீனா கையகப்படுத்தும் என ஆரிய முடிகிறது. உலகின் மிகப்பெரிய கடற்படையை சீனா அதிக எண்ணிக்கையிலா போர்க்கப்பல்களை கொண்டுள்ளது.
அத்துடன் அதன் கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனங்கள் உலகம் முழுவதும் துறைமுக வசதிகளை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. 46 நாடுகளில் 78 துறைமுகங்களை உருவாக்க அல்லது விரிவுபடுத்த 2000-2021 வரை அதாவது 30 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான கடன்களையும் மானியங்களையும் வழங்கியதாக எய்ட்டேட்டாவின் அறிக்கை கூறியுள்ளது.
சீன இராணுவ தளங்கள் பற்றி அடிக்கடி ஊகங்கள் இருந்தாலும், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் ஒரு இராணுவ தளத்தை மட்டுமே தற்போது நிறுவியுள்ளது.
2000-2021 வரை ஜிபூட்டியில் 466 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா முதலீடு செய்துள்ளது. தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட இடங்களில் அதிக வெளிநாட்டு இராணுவ தளவாட வசதிகளை பரிசீலித்து வருவதாக பென்டகன் கவலை தெரிவித்துள்ளது.
எனினும் எய்ட்டேட்டாவின் அறிக்கை தொடர்பில் பீய்ஜிங்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை. என குறிப்பிடபட்டுள்ளது.