இந்திய இலங்கை அரசுகளின் மீனவர்கள் தொடர்பான நகர்வுகளில் எமக்கு திருப்தி ஏற்படவில்லை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க, சாமசங்களின் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
கடந்த 27 ஆம் திகதியிலிருந்து வடக்கு மீனவர்களின் பிரச்சினை பேசு பொருளாக அல்லது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக சர்வதேசங்களிற்கு காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆனால் தீர்வு நோக்கி நகருவதாகவே அல்லது தீர்வு நோக்கி முயற்சிப்பதாகவோ இலங்கை இந்திய அரசுகளின் செயற்பாடுகள் அமையவில்லை. இது இலங்கை மீனவர்களுக்கு திருப்தியாக இல்லை.
நாம் பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலகம், இந்திய துணைத்தூதுவர் இல்லம் என்பவற்றை முடக்கியும் கூட இந்திய மத்திய அரசு இது தொடர்பில் ஒரு துளியேனும் கரிசனை காட்டவில்லை.
தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் கௌரவ முக ஸ்டாலின் அவர்கள் இந்திய மீனவர்கள் இலங்கையில் பிடிபட்டதும் மத்திய அரசுக்கு அவர்களை விடுவிக்கக் கோரி கடிதம் எழுதுகின்றார். அவருக்கு வடக்கு வாழ் கரையோர மீன் பிடிப்பாளர் சார்பில் கூறிக்கொள்வது யாதெனில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை விடுத்து 2500 இழுவை மடி படகுகளையும் தடை செய்யுங்கள்.
மீனவர்களைப் பொருத்தவரையில் எங்களுடைய பிரச்சினைகளை இரு நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக இரு நாட்டு மீனவர்களும் பேசித்தான் இதற்கான தீர்வினை எட்ட வேண்டும்.
கடந்த காலங்களைப் போன்று அதிகாரிகள் மட்டத்தில் குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி காலத்தை கடத்தும் செயற்பாட்டை மத்திய அரசு உடன் நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டு அரசும் சரி இந்திய மத்திய அரசும் சரி எமது போராட்டங்களையும் எமது கோரிக்கைகளையும் நீர்த்துப் போகச் செய்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .என்றார்.
#SrilankaNews
Leave a comment