அன்று தந்தைக்கு அச்சுறுத்தலான பிரேரணையில் மகன் இன்று கையொப்பம்
Thaaraga
காலச்சக்கரம் எவ்வளவு விசித்திரமானது….!
‘ அன்று தந்தைக்கு அச்சுறுத்தலான பிரேரணையில் மகன் இன்று கையொப்பம்’
பிரேமதாசவுக்கு வேட்டு வைக்க முற்பட்ட காமினியின் மகன் சஜித் பக்கம்…..
கைகொடுத்த ரணில் ‘கப்சிப்’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (12) கையொப்பமிட்டார்.
இலங்கையில் 1978 ஆம் ஆண்டே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது.
1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வரலாற்று வெற்றியை ஐக்கிய தேசியக்கட்சி பதிவுசெய்த கையோடு, அதிரடியாக அரசமைப்பை மாற்றி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உருவாக்கினார் ஜே.ஆர். ஜயவர்தன.
1982 ஒக்டோபர் 20 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஜே.ஆர்.
1988 டிசம்பர் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கிய ரணசிங்க பிரேமதாச வெற்றிவாகை சூடினார்.
1989 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிநடை போட்டது.
காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி போன்ற ஐ.தே.கவின் முக்கிய தளபதிகள் இருக்கையில், டி.பி. விஜேதுங்கவிடம் பிரதமர் பதவியை பிரேமதாச கையளித்தார்.
ரணசிங்க பிரேமதாசவின் இந்த நடவடிக்கை உட்பட மேலும் சில நகர்வுகளால் காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத் முதலி உட்பட மேலும் சிலர் பிரேமதாசமீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.
1991 இல் காமினி திஸாநாயக்க, லலித் உட்பட மேலும் பலர் இணைந்து எதிரணி உதவியுடன் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை முன்வைக்க முற்பட்டனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக குற்றப் பிரேரணையில் கையொப்பம் திரட்டப்பட்டு, சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அப்போது சபாநாயகராக இருந்த எம். எச். மொஹமட் ஆரம்பத்தில் ரணசிங்க பிரேமதாச எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே இருந்தார். பின்னர் ‘பேரம் பேசுதல்’ மூலம் அவரின் மன நிலைமை மாறியது.
குற்றப் பிரேரணையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை எம்.பிக்கள் (150) கையொப்பமிட வேண்டும். அப்போது அதனை சபாநாயகர் நிராகரிக்க முடியாது. 150 இற்கும் குறைவான எம்.பிக்கள் கையொப்படம் இட்டிருந்தால் அதனை நிராகரிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது.
இதன் அடிப்படையில் ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரும் முயற்சியை சபாநாயகர் தோற்கடித்தார்.
பிரேமதாசவின் தலை தப்பியதால், காமினி, லலித் உள்ளிட்டவர்கள் புதிய கட்சியையும் ஆரம்பித்து, ரணசிங்க பிரேமதாசவுக்கு சவால் கொடுத்தனர். அப்போதும் அவர் அசையவில்லை.
அன்று குற்றப் பிரேரணை அச்சுறுத்தலை எதிர்கொண்ட ரணசிங்க பிரேமதாசவின் மகன்தான் தற்போதைய எதிர்க்கட்சி – ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச.
இலங்கை அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணையில் கையொப்பமிடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக செயற்பட்ட காமினி திஸாநாயக்கவின் இரண்டாவது மகனான மயந்த திஸாநாயக்கவும் மேற்படி பிரேரணைகளில் கையொப்பம் இட்டுள்ளார்.
மயந்த திஸாநாயக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக சஜித் இம்மறை வாய்ப்பு வழங்கினார். நவீன் திஸாநாயக்கவும், காமினி திஸாநாயக்கவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றப் பிரேரணை அச்சுறுத்தல் வரும்போது, ரணில் விக்கிரமசிங்க பிரேமதாச பக்கமே நின்றார். இன்று இதுவிடயம் தொடர்பில் மௌனம் காத்துவருகின்றார்.