எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுதலை

24 66a49c5ec008b

எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுதலை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர் ஏழு பேரை ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி கடலோர காவல் படையினர் வைபவ் ரோந்து கப்பல் கடந்த மே 18 ஆம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கன்னியாகுமரிக்கு தென் கிழக்கே 74.8 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையில் நின்று கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்து திர்ட்டி மகா – 6 என்ற படகை பிடித்து அதிலிருந்த ஏழு கடற்றொழிளார்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விசாரணையில் சுசந்தா, போல்கே பியால் டி சில்வா, கழுத்தோடகே நிறங்க லக்மால், ரம்முத்து இந்திக்க திலிப் குமாரா, கபுகீ கியானகே தாரக அமில குமாரா, மல்லேவாடு உபாலி மற்றும் ராம் புஷ்ப குமாரா ஆகிய ஏழு இலங்கை கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவர்களை தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர் இதையடுத்து தருவைகுளம் மரைன் காவல்துறையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை காவல்துறையினர் ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

கடற்றொழிலாளர்களின் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று (27) வழக்கு விசாரணைக்கு வந்த போது ஏழு பேரும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் இருந்து ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அப்போது இலங்கை கடற்றொழிலாளர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பரிந்துரையின் படி ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகன் ராம் இலங்கை கடற்றொழிலாளர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விடுதலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் ஏழு பேரும் ஓரிரு நாட்களில் இலங்கை அரசிடம் ஒப்படைக்க படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version