நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு (நவ 01) ஆலயத்தின் 6 உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆலயத்தின் பின் கதவு வழியாக இரவில் உள்நுழைந்த திருடர்கள் 6 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
திருடப்பட்ட உண்டியல்களில் உடைக்கப்பட்ட மூன்று உண்டியல்களை, பணத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள நீரோட்டம் கொண்ட கங்கையில் வீசிச் சென்றுள்ளனர்.
திருடர்கள் தமது உருவங்கள் பதிவாகாமல் இருக்க, ஆலயத்தின் பிரதான காரியாலயத்தில் உள்ள முழு CCTV கண்காணிப்பு இணைப்பையும் துண்டித்துள்ளதுடன், காணொளிகளைச் சேமிப்பு செய்யும் பதிவு கருவிகளையும் (DVR) பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும் திருடிச் சென்றுள்ளனர்.
ஆலய நிர்வாகம் முறைப்பாடு பதிவு செய்ததைத் தொடர்ந்து, நுவரெலியா காவல்துறையினர் ஸ்தலத்துக்கு விரைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் காவல்துறையினர் கைரேகைகளைப் பதிவு செய்ததுடன், மோப்ப நாயின் உதவியுடனும், ஆலயத்தின் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் CCTV கண்காணிப்புக் கமரா பதிவுகளைக் கொண்டும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்டியல்களை உடைத்துத் பெருந்தொகையான பணம் திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு இன்னும் கணக்கொடுக்கப்படவில்லை என்றும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.