புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பழையதை விட மிக மோசமானது: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றச்சாட்டு

19

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பாதுகாப்பதற்காக, அரசாங்கத்தை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் போர்வையில் புதிய சட்டமூலத்தை அரசு கொண்டுவர முயல்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற, புதிய சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளும் முந்தைய அரசுகளின் கொள்கைகளைப் போலவே இருப்பதை இந்த நடவடிக்கை நிரூபிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் போராட்டத்தின் உண்மைத்தன்மையை உலகிற்கு மறைப்பதற்காக அரசாங்கம் பல்வேறு வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சிறீதரன் குற்றம் சாட்டினார். மக்களின் காணிகளை விடுவிக்காமல், அரசியல் கைதிகளை விடுவிக்காமல், தமிழர்களின் நிலங்களில் புத்த விகாரைகளை அமைத்து வரலாற்று ரீதியான அடக்குமுறைகளை அரசு தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாற்பத்தேழு ஆண்டுகளாக தமிழ் மக்கள் இழந்த உயிர்கள் மற்றும் சொத்துக்களைக் கருத்திற்கொள்ளாமல், ஏமாற்று வேலைகளில் அரசு ஈடுபடுவதாகவும் அவர் விமர்சித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், பழைய சட்டத்தை விட மிகவும் மோசமானது என அவர் எச்சரித்தார். “பயங்கரவாதம்” என்பதற்கான வரையறை தெளிவற்றதாக உள்ளதோடு, மக்களின் ஒன்று கூடும் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஒரு சாதாரண உப பொலிஸ் பரிசோதகர் நினைத்தால் மக்களைக் கைது செய்யவோ அல்லது ஒன்று கூடுவதைத் தடுக்கவோ முடியும் என்ற நிலை தற்போதைய சட்டத்தில் காணப்படுவதாக அவர் கவலை தெரிவித்தார்.

கைது செய்யப்படும் நபர்களை ஜனாதிபதியின் கையொப்பத்துடன் தடுப்புக் காவலில் வைக்கும் பழைய நடைமுறை மாற்றப்பட்டு, பொலிஸாரே நேரடியாகத் தடுத்து வைக்கும் அதிகாரத்தை புதிய சட்டம் வழங்குகிறது. பழைய சட்டத்தை தக்க வைப்பதற்கான நடவடிக்கையிலேயே இந்த அரசு ஈடுபடுகிறது எனத் தெரிவித்த சிறீதரன், இந்த மோசமான புதிய சட்டத்தை விட பழைய சட்டமே பரவாயில்லை என மக்கள் உணரும் நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Exit mobile version