“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடந்த நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுத்துவிட்டு இப்போது முட்டாள்தனமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ். வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மாவட்ட செயலக முன்றலில் இன்று நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நல்லாட்சி அரசுக்கு முண்டு கொடுத்து ஐ.நாவில் இலங்கை அரசைக் காப்பாற்றியதன் மூலமே ராஜபக்ச அரசானது காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுத்து
காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை மூடிமறைக்க முற்படுகின்றது.
நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், செல்வம் அடைக்கலநாதன் நேற்று ஓர் அறிக்கை விட்டிருக்கின்றார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசின் ஒரு இலட்சம் ரூபா நட்டஈட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுத்துவிட்டு இப்படி முட்டாள்தனமான கருத்தை இப்போது செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்க முடியாது” – என்றார்.
#SriLankaNews