ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் கொழும்பில் ஊடவியலாளர்கள் தாக்குதல் சம்பவத்தில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவருடன் நெருக்கத்தில் இருந்த முன்னாள் இராணுவ உளவுத்துறை பிரதானி துவான் சுரேஷ் சலே,எந்த விதாரன ஆகியோர் நேரடி தொடர்புப்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
(12.10.2025) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,
கோட்டாபய செய்த பல குற்றங்களுக்கு இவர்கள் தான் உதவி செய்தவர்கள். ஓய்வுபெற்ற பின்னரும் எந்த விதாரண கோட்டாபயவுடன் இருந்தார்.இவை தொடர்பில் ஆழமான விசாரணைகள் செய்தால் கண்டுபிடிக்கலாம்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகரவுக்கு இது தொடர்பான சில சாட்சியங்கள் தெரியும்.
அக்காலப்பகுதியில் கொழும்பு பாதுகாப்பு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச தான் கவனித்துக்கொண்டிருந்தார். மாதத்திற்கு ஒரு முறை புலனாய்வு அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
நான் வடக்கு கிழக்கில் தான் இருந்தேன்.என்னையும் லசந்த கொலையில் சம்பந்தப்படுத்த பார்த்தனர். எனக்கு லசந்தவுடன் எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. கோட்டாபயவுக்கு தான் இருந்தது.
மிக் விமானம் கொள்வனவு தொடர்பில் தகவல் வெளியிடுவதாக லசந்த தெரிவித்திருந்தார். அப்போது என்னிடம் இருந்த புலனாய்வு அதிகாரிகளை சிறையில் அடைத்து இந்த கொலைக்கு இராணுவத் தளபதி தான் காரணம் என காட்ட முயன்றனர். குற்றப்புலனாய்வுத்துறையினர் இது தொடர்பில் நன்கறிவர் என்றும் தெரிவித்துள்ளார்.