கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் முறையற்ற நடவடிக்கைகளை ஊக்குவித்து, இந்நாட்டின் இலவசக் கல்வியை அரசாங்கம் சீரழித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று (03) கரம்பேத்தர ஸ்ரீ அபயராஜராமய விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், பின்வரும் முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.
சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கராவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறை நவீன உலகிற்கு ஏற்ப மாற வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோடிக்ஸ் (Robotics) போன்ற தொழில்நுட்பங்கள் கல்விக்குள் இணைக்கப்பட வேண்டும். இல்லையெனில் நாடு பல தசாப்தங்கள் பின்னோக்கிச் செல்லும்.
நவீனமயமாக்கல் அவசியமானது என்றாலும், எமது கலாசாரம் மற்றும் விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக, வரலாறு ஒரு கட்டாய பாடமாகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நவீனமயமாக்கல் என்ற பெயரில் கலாசாரத்திற்கு முரணான மற்றும் முறைசாரா விடயங்களை கல்விக்குள் புகுத்துவது எதிர்கால சந்ததியினரை அழிக்கும் செயல் என அவர் எச்சரித்தார்.
கல்விக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டும், பாடப்புத்தகங்களில் இருந்து சில பக்கங்களைக் கிழித்துவிட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“அச்சிடப்பட்ட புத்தகங்களில் இருந்து பக்கங்கள் நீக்கப்படுவதற்குப் பின்னால் உள்ள சதி வெளிப்படுத்தப்பட வேண்டும்.” – சஜித் பிரேமதாச.
தான் முன்னெடுத்து வரும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டங்களை விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்த அவர், இவை வெறும் விநியோக நடவடிக்கைகள் அல்ல, நாட்டின் எதிர்காலத்திற்கான சமூக முதலீடு எனத் தெரிவித்தார்.