‘டித்வா’ சூறாவளி தொடர்பில் 15 நாட்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தற்போது வானிலை ஆய்வு அதிகாரிகளைக் குறை கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
வங்காள விரிகுடாவில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் சூறாவளி உருவாகும் சாத்தியக்கூறுகள் குறித்தும் வானிலை ஆய்வுத் துறை கடந்த நவம்பர் 11ஆம் திகதி ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் மோசமான வானிலை தோன்றுவதற்கு முன்பே வானிலை ஆய்வுத் துறை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு (NBRO) இது தொடர்பில் எச்சரிக்கைகளை வெளியிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். எனவே, துல்லியமான எச்சரிக்கைகளை வழங்கிய அதிகாரிகளை அரசாங்கம் குறை கூறக்கூடாது என்று வலியுறுத்தினார்.
முன்னதாக அறிவிக்கப்பட்டபோதிலும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் கேள்வியெழுப்பினார். நிவாரண விநியோகம் வெளிப்படையானதாகவும் அரசியல் செல்வாக்கு இல்லாததாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத்தை விரைவுபடுத்த அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் அழைப்பு, ஊடகச் செய்திகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும், ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக பயனுள்ள நிவாரணத்தில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.