“கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்” – வவுனியாவில் வீதி மறியல் போராட்டம்

IMG 5944 12

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு தெரிவித்து இளையோர் மற்றும் வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக கோட்டபாய ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியவாறும், பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டம் இடம்பெற்றது. அத்துடன் போராட்டக்காரர்கள் ஏ – 9 வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரம் ஏ – 9 வீதியை மறித்துப் போராடிய அவர்கள் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தாது பின்னர் பிரதான வீதியில் இருந்து விலகிச் சென்று வீதியோரத்தில் நின்று “கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்” எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அப்பகுதியில் நின்ற இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர் ஒருவர் மதுபோதையில் போராட்டக்காரர் மீது அருகில் இருந்த வெற்றிலைக் கடையில் இருந்து பெட்டி ஒன்றைத் தூக்கி வீசினார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளையோர் அவருடன் முரண்பட்டபோது குறித்த ஊழியர் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் குறித்த நபர் மீள அங்கு வந்தபோது அவரை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அவரைக் கடுமையாக எச்சரித்தனர்.

சுமார் ஒரு மணிநேரம் இந்தப் போராட்டம் இடம்பெற்றதுடன், அரசுக்கு எதிராகப் பல கோஷங்களும் எழுப்பப்பட்டன.

#SriLankanews

 

Exit mobile version