தற்போதுள்ள, குடிவரவு சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
இந்தியாவில் ஏதிலியாக வாழ்ந்த நிலையில், நாடு திரும்பிய ஒருவர் பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த அறிவிப்பை, பிமல் ரத்நாயக்க விடுத்துள்ளார்.
இந்த கைது சம்பவம் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தாயகம் திரும்பி வர பதிவு செய்துள்ள 10,000இற்கும் மேற்பட்டவர்களை அச்சுறுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதந்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்துள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அரசாங்கக் கொள்கை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாட்டில் உள்ள பழைய சட்டம் தானாகவே செயற்பட்டமையினால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.
எனினும், போருக்குப் பின்னர், சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த சட்டத்தை மாற்றியிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, தாம் 2007இல் இந்தியாவில் உள்ள ஏதிலி முகாம்களுக்குச் சென்றதாகவும், 2008இல் அந்த முகாம்களில் 28,500 இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்கும் ஒரு சட்டத்தை முன்னோடியாக அறிவித்ததாகவும் ரத்நாயக்க கூறியுள்ளார்.
இந்தநிலையில், குறித்த குடிவரவுக் கொள்கையை திருத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில், அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.