‘திட்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை (Death Certificates) விநியோகிக்கப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கடந்த டிசம்பர் 2ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அவசர அனர்த்த நிலைமை காரணமாகக் காணாமல் போன ஒருவரைப் பற்றி 2 வாரங்களுக்குப் பின்னரும் தகவல் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு அல்லது அவளுக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்த நிலைமை காரணமாகக் காணாமல் போயுள்ள நபர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈட்டுப் பணத்தை விரைவில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தச் சான்றிதழ்களை வழங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்கான தேவையான சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அனர்த்தம் காரணமாக நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்பதை உரிய பிரதேச கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்தினால், அந்த மாவட்ட பிரதிப் பதிவாளருக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 13 (நாளை) காலை 9 மணி முதல், உடஹேன்தென்ன, இலக்கம் 1, தமிழ் மகா வித்தியாலயம், பரகல ஜனபதம். டிசம்பர் 14 (நாளை மறுதினம்) காலை 9 மணி முதல், பிரதேச செயலகம் – தொலுவ காணாமல் போன நபர்களின் குடும்பங்களுக்குச் சான்றிதழ்களை வழங்குவதற்காகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் நடமாடும் சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது.