ராஜபக்சக்களுக்கு ஒட்சிசன் கொடுத்து காப்பாற்றும் ரணில்! – கஜேந்திரகுமார் சீற்றம்

20220525 115437

இன்றைக்கோ நாளைக்கோ என ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகி ராஜினாமா செய்யக் கூடிய சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் ரணில் விக்ரமசிங்க, அவர்களுக்கு ஒக்சிஜன் கொடுத்து காப்பாற்றுகின்ற வகையில்
செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அது மட்டுமல்லாது எந்தவித வெட்கமும் இல்லாமல் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் உதவிகளை வழங்க கோரியும் முதலீடுகளைச் செய்ய கோரியும் அழைப்பு விடுக்கின்றனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஒற்றையாட்சிக்குள் ஒருமித்த நாடு, ஏக்கியராஜ்ய என்ற நாடகத்தை கூட்டமைப்புடன் இணைந்து நடத்திய ரணில் விக்ரமசிங்க, தற்போது கோட்டாபய ராஜபக்ஷ கலைக்கப்பட சந்தர்ப்பங்கள் இருந்தபோது அவரை காப்பாற்ற முற்படுகின்றார்.

இந்த அரசாங்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்களினுடைய உதவிகளையே இன்று நாடி இருப்பதென் மூலம் மிகவும் கேவலமான நிலையில் உள்ளனர் என்பதை அறியலாம். தமிழ் மக்கள் சரியான கோணத்தில் இதனை விளங்கிக் கொண்டு முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும்.

ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பம் இட்டு, இங்கு நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பொறுப்புக்கூற வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதனுடாகவும் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற சமஸ்டி தீர்வை வழங்கினால் மட்டும் தான் தமிழ் மக்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.சிங்கள மக்களும் இதனை விளங்கிக் கொண்டு,எதிர்காலத்தில் தாங்கள் தெரிவு செய்கின்ற தலைவர்கள் இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும்போது பொருளாதாரத்தை

அதனூடாக கட்டியெழுப்ப தமிழ்மக்கள் உதவி செய்வர் – என்றார்.

#SriLankaNews

Exit mobile version