வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் ஞாயிறுக்கிழமை (03.04.2022) 10 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும் கண்டன பேரணிக்கு ஆதரவை தெரிவித்திருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த பேரணியில் சகல பொதுமக்களும் சிவில் சமூக அமைப்புக்களும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னரான தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள் மிகவும் முக்கியமானதும் காத்திரமானதுமான வகிபாகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு சிரமங்கள், இடையூறுகள், சவால்களின் மத்தியில் மன உறுதியுடன் தளராமல் அவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு நாம் அனைவரும் எம்மால் இயன்றளவு உடல், உள ரீதியான ஆதரவை கொடுப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்சஅவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும் நீதிக்காக போராடும் தாய்மார்களின் நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தும் நோக்கங்களுக்காகவே ஞாயிறுக்கிழமை அன்று கண்டன பேரணி யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
நான் சுகயீனமாக இருப்பதால் என்னால் அன்றைய தினம் கலந்துகொள்ள முடியுமோ தெரியவில்லை. ஆனால், இந்த போராட்டத்தில் எனது கட்சி, உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரையும் மற்றும் பொதுமக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கின்றேன். – என்றுள்ளார்.
#SriLankaNews

