ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மலையகத்தில் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை மற்றும் மொனறாகலை ஆகிய மலையக மாவட்டங்களில் எட்டு திக்கிலும் ‘கோட்டா கோ ஹோம்’ என்ற கோஷம் ஓங்கி ஒலித்தது.
மேற்படி மாவட்டங்களில் பிரதான மற்றும் சிறு நகரங்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் இன்று தொழிலுக்கு செல்லவில்லை. தமது குடியிருப்புகளுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்கவிட்டிருந்தனர். அதேபோல தோட்டவாரியாக எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து முடங்கியிருந்தது. மேலும் சில இடங்களில் மட்டுப்படுத்தப்பட்டளவில் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை, தலவாக்கலை உட்பட சில நகரங்களில் போராட்டம் உக்கிரமடைந்தது. கட்சி, தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் மக்கள் சக்தியாக ஒன்றிணைந்து, கோட்டா- ரணில் அரசே பதவி விலகு என வலியுறுத்தினர்.
#SriLankaNews

