பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் – அரசாங்கத்துக்கு ஆதரவான சட்டத்தரணிகளுக்கும் இடையே இன்று மதியம் அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதக நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
குறித்த போராட்டங்கள் தொடர்பில் பிரதமரிடம் சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள்,
கடந்த காலம் மற்றும் தற்போதைய சட்டங்களைப் பற்றிய புரிதலின்றி இளைஞர் யுவதிகளை ஈடுபடுத்தி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தினை, நாடு முழுவதும் முன்னெடுப்பதற்கு செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை நாட்டில் மீண்டும் ஒரு பேரழிவை ஏற்படுத்தும்.
தற்போதைய ஆர்ப்பாட்டங்களுக்கு நிதி பெற்றுக்கொடுத்தல் மற்றும் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு சாதாரண பொதுமக்கள் பணம் வழங்கியுள்ளதாக தெரியவில்லை. ஏதேனுமொரு அமைப்பொன்றினால் திட்டமிட்டு இதற்கான பணத்தை செலவிட்டு நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்கள் மக்களை ஈடுபடுத்தி அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு உட்படுத்துவதற்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீக்கி அவர்களது குறுகிய இலக்குகளை அடைவதற்கும் முயற்சிக்கின்றன. எனவே, இந்த நெருக்கடியை மிகுந்த புரிதலுடன் மக்களின் தேவைகளை நிறைவேற்றி, ஜனாதிபதியும் பிரதமரும் துணிச்சலுடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது – என தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த பிரதமர், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், மக்களை ஈடுபடுத்தி வேறு அமைப்புகள் முன்னெடுத்துவரும் அரசியல் சதி குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
#SriLankaNews