“பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலம் என்பது மிகவும் அச்சுறுத்தலான விடயம். இப்போதும் இந்தச் சட்டத்தில் இதே நிலைமையே காணப்படுகின்றது. ‘திருத்தம்’ என்ற பெயரில் இந்தச் சட்டத்தில் எந்த மாற்றங்களையும் அரசு செய்யவில்லை.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவித்ததாவது:-
“தற்காலிக ஏற்பாடு எனக் கூறி கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 43 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. எனவே, ஆறு மாத கால தற்காலிக ஏற்பாடுகள் என்பது ஒரு நகைப்புக்குரிய விடயம் .
அதேபோல் இது அரசியல் ரீதியான சட்டம் என ரணில் விக்கிரமசிங்க கூறினார். ஆனால், இது அரசியல் ரீதியானது அல்ல. அரசியல் அமைப்புக்கு முரணாகவே இது கொண்டுவரப்பட்டது.
அவசர சட்டமூலமாகக் கொண்டுவந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் இதனை நிறைவேற்றினர். இதற்கு நீதிமன்றத்தின் ஆணை வழங்க முன்னரே சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டனர்.
அரசியல் அமைப்புக்கு முரணாகக் கொண்டுவந்த ஒரு சட்டத்தை அடுத்துவந்த அரசுகள் கருத்தில்கொள்ளாது நடைமுறைப்படுத்தின .
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட அன்றிலிருந்து அது துஷ் பிரயோகம் செய்யப்பட்டே வருகின்றது.
பயங்கரவாதத்தை இது தடுக்கவில்லை. இது குறித்து பல சாட்சியங்கள் உள்ளன. நானும் சில வழக்குகளில் ஆஜராகியுள்ளேன்.
குறிப்பாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இதில் அச்சுறுத்தலான விடயமாக உள்ளது. வற்புறுத்தப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுகின்றது. இப்போதும் இதே நிலைமையே காணப்படுகின்றது. இவற்றில் எந்த மாற்றங்களையும் அரசு செய்யவில்லை.
தடுப்புக்காவல் காலத்தை 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாகக் குறைத்ததாகக் கூறப்படுகின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. 18 மாதங்களுக்குப் பின்னர் குறித்த நபர் விடுவிக்கப்படுவது நியாயமானதா? அல்லது 12 மாதங்களுக்கு பின்னர் விடுவிப்பது நியாயமானதா?
பிணை வழங்கப்படும் என்றாலும் கூட மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கினாலும் மேல் நீதிமன்றம் அதனை நிராகரித்து விசாரணைகளை முடிவும் வரையில் நபரைத் தடுத்து வைக்க முடியும்.
எனவே, இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக நாம் நாடு முழுவதும் சென்று ஒரு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம்.
சகல இன மக்களையும் சந்தித்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற தெளிவுபடுத்தலை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்தச் சட்டத்தின் கீழ் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜே.வி.பியினர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டு வருகின்றது. எனவேதான் சகல மக்களும் இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றீர்கள். தவறான ஒரு முயற்சியை ஆரம்பித்து அது நல்ல நகர்வு எனவும், அதற்கான ஆரம்பத்தைக் கையாண்டுள்ளோம் எனவும், இதனைத் தொடர்வோம் எனவும் கூறுகின்றீர்கள். அதேபோல் உலகத்தை ஏமாற்ற நினைக்கின்றீர்கள்.
இதில் மறுசீரமைப்பு என்ற சொல்லுக்கான அர்த்தத்தையே மாற்றியுள்ளீர்கள். ஆகவே, இந்தச் சட்ட திருத்தத்தை முழுமையாக நாம் எதிர்க்கின்றோம்.
இதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரும் எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்” – என்றார்.
#SriLankaNews