உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

4 1

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் நயினாதீவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது வடக்கு மக்களின் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இந்தச் சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விகாராதிபதி, தையிட்டி விகாரையைச் சுற்றியுள்ள தனியார் காணிகள் உடனடியாக அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளைக் கொண்டு பார்க்கும்போது, காணி விடுவிப்பு நடவடிக்கைகள் இந்த ஆட்சிக்காலத்திலேயே சாத்தியமாகும் எனத் தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்தால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். உங்களது ஆட்சிக்காலத்திலேயே இதனைச் செய்து முடியுங்கள் என ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

வடக்கிலுள்ள பௌத்த மதத் தலைவர் ஒருவர், தமிழ் மக்களின் தனியார் காணிகளை விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளமையானது, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பது காணி விடுவிப்பு விவகாரத்தில் புதிய வேகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version