கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு இவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019 இல் பாதாள உலகக் கும்பல் தலைவன் மாகந்துர மதூஷிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
அந்தத் துப்பாக்கி எவ்வாறு மதூஷின் கைக்குச் சென்றது அல்லது அது எப்போது காணாமல் போனது என்பது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணையில் முறையான விளக்கம் அளிக்கத் தவறியமையால் இவர் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
72 மணிநேரத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் சி.ஐ.டி அதிகாரிகளால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தா, இன்று பிற்பகல் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், அவரை அடுத்த மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவரிடம் இருந்த ஏனைய அரச துப்பாக்கிகள் குறித்தும் சி.ஐ.டி தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.