கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில் செலுத்துமாறு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் 6 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுராதபுரம்(Anuradhapura) தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் 2012 ஆம் ஆண்டு இந்த சம்பவம் பதிவானது.
சம்பவம் நடந்த நேரத்தில் 27 வயதுடைய தகவல் தொடர்பு மைய இயக்குநரான, மனுதாரர், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவின் மீது இந்த தீர்ப்பு நேற்றையதினம்(23) வழங்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டு உத்தரவுக்கு மேலதிகமாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறும் உயர் நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மொத்த இழப்பீட்டுத் தொகையையும் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டது.
மனுதாரர் சுசில் பிரியங்க செனவிரத்ன, தம்புத்தேகம பொலிஸாரின் நடத்தைக்கு எதிரான போராட்ட ஊர்வலத்தில் பங்கேற்றதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டதாக நீதிமன்றில் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தீர்ப்பு நேற்றையதினம்(23) வழங்கப்பட்டுள்ளது.