வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
அத்துடன், வீட்டின் ஒருபகுதியும் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மீறாவோடை 4 ம் பிரிவு கூட்டுறவுச்சங்க வீதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று(20) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உரிமையாளர் முச்சக்கரவண்டியில் வாடகைக்குச் சென்று சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பிய பின்னர் முச்சக்கரவண்டியை வீட்டின் முன்பகுதியில் நிறுத்திவிட்டு நித்திரைக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தீயில் எரிந்து கொண்டிருந்துள்ளது.
இதனையடுத்து நீர் ஊற்றித் தீயைக் கட்டுப்படுத்தியதன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வீட்டின் முன்பகுதி சுவரில் ஒட்டப்பட்டிருந்த கடிதம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளதுடன், இரு குடும்பங்களுக்குள்ளே ஏற்பட்ட சண்டை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.