‘டிட்வா’ புயலினால் ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தத்தில் பெரும் சேதத்திற்குள்ளான மாத்தளை மாவட்டத்தின் கம்மடுவ பிரதேசத்தில், அனர்த்தத்தின் காரணமாகக் கிராமத்தையே விட்டுச் சென்ற மக்களால் கைவிடப்பட்ட நாய்கள் மற்றும் கட்டாக்காலி நாய்களின் பசியைப் போக்க அப்பகுதி நலன் விரும்பிகள் உணவளிக்கும் மனிதாபிமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.
கம்மடுவ பிரதேச மக்கள், அடுத்த மண் சரிவு ஏற்படலாம் என்ற கடும் அச்சத்தில், அனர்த்தத்தில் பலியானவர்களைத் தவிர, எஞ்சிய அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறிச் சென்று விட்டனர்.
கிராமத்தில் ஒருவரும் இல்லாத நிலையில், தம்மை வளர்த்த, காணாமல் போன தமது எஜமானர்களைத் தேடி வளர்ப்பு நாய்கள் அவர்கள் வசித்த வீடுகளைப் பார்த்துக் குரைத்த வண்ணம் அங்குமிங்கும் அலைவது அங்கிருந்தவர்களுக்கு மற்றுமொரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கிராமத்தை விட்டுச் சென்றதால் நாய்களுக்கு உணவளிக்க ஆட்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாத்தளை நலன் விரும்பிகளான சிதம்பரம் ஜெயபிரகாஷ் மற்றும் மகேந்திர ராஜன் மகாலிங்கம் ஆகியோர், கிராமத்தில் இருந்த வயோதிபரான ராஜா என்பவரின் ஒத்துழைப்புடன் உணவு சமைத்து அந்த நாய்களுக்கு உணவளித்துப் பாதுகாக்கும் பணியைச் செய்தனர்.

