ரம்புக்கனை சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பான மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மற்றும் கண்டி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கேகாலைக்குப் பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நேற்றிரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ரம்புக்கனையில் நபர் ஒருவரைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட அனைத்து அதிகாரிகளையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதிவான் பொலிஸ் அதிபருக்கு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கேகாலை நீதிவான் பிறப்பித்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பொலிஸ்மா அதிபர் சி.டீ. விக்கிரமரத்ன, குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் அதிபருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, கேகாலைக்குப் பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
அவர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைதானார்.
அவருக்கு மேலதிகமாக, ரம்புக்கனைத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கண்டி, குண்டசாலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
ரம்புக்கனையில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த லக்சான் என்ற 42 வயதான நபர் கொல்லப்பட்டதுடன், கலவரத்தில் 15 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 27 பேர் காயமடைந்தனர். அவர்களில் 8 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment