‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பது தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழர் ஒருவரேனும் உள்வாங்கப்படாமைக்கு அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இ.தொ.காவின் ஊடகப்பிரிவால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பதை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கற்றாராய்ந்து, அதற்கான சட்டவரைபை தயாரிப்பதற்காகவும், இது விடயம் தொடர்பில் நிதி அமைச்சால் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள
சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களை கற்றாராய்ந்து அவற்றில் திருத்தங்கள் இருப்பின் அதற்கான
முன்மொழிகளை முன்வைப்பதற்காகவுமே குறித்த செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
13 பேரடங்கிய இந்த செயலணியின் தலைவராக ஞானசார தேரரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி செயலணியானது மாதம் ஒரு முறை ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், 2022 பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பணிக்கப்பட்டுள்ளது.
13 பேரடங்கிய இந்த செயலணிக்கு முஸ்லிம்கள் உள்வாங்கப்பட்டுள்ளபோதிலும் தமிழர் எவரும் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews