நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின் உரிமத்தை இரத்து செய்யக் கோரி, அப்பகுதித் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று (03) பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இன்று காலை 9.00 மணியளவில் ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் திரண்ட மக்கள் குறித்த மதுபானக் கடைக்கு வழங்கப்பட்ட உரிமம் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. அதனை அதிகாரிகள் மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாகவும், புலமைப்பரிசில் தேர்வில் சித்தியடையும் மாணவர்கள் கூட, இந்தப் பழக்கத்தால் சாதாரண தரத் தேர்வில் தோல்வியடையும் துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மதுபானக் கடைக்கு மிக அருகிலேயே கோயில், பள்ளிவாசல் மற்றும் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளதால், மத விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளின் போது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
மதுக்கடை காரணமாகக் கிராமத்தின் அமைதி சீர்குலைந்துள்ளதோடு, கடந்த காலங்களில் இதனால் உயிரிழப்புகள் கூட நேர்ந்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
“குறிப்பிட்ட சிலர் புத்தகங்களை விற்று மது வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது எமது கிராமத்தின் எதிர்காலத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது.” – போராட்டக்காரர்கள்.
இந்தப் போராட்டத்திற்கு நோர்வுட் பிரதேச சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட்டு, காலாவதியான மதுபானக் கடை உரிமத்தை நிரந்தரமாக இரத்து செய்து, கடையை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் எனத் தோட்டத் தொழிலாளர்கள் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.