கொடிய நிபா வைரஸ் அச்சுறுத்தல்: விமான நிலையங்களில் அதிரடி சோதனை – இலங்கை சுகாதார அமைச்சு தயார் நிலை!

Virus 1200x675px 27 01 26 1000x600 1

அண்டை நாடுகளான இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் நிபா (Nipah) வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இலங்கைக்குள் இந்த வைரஸ் ஊடுருவுவதைத் தடுக்கச் சுகாதார அமைச்சு மிகக் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளைக் காண கொழும்பிற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான இரசிகர்களைக் கருத்திற்கொண்டு, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை விடவும் அதிக இறப்பு விகிதத்தைக் (40% – 75%) கொண்ட இந்த நிபா வைரஸ், மூளை அழற்சி மற்றும் கடுமையான சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியது. ஜனவரி மாதத்தில் மட்டும் இலங்கைக்குச் சாதனை அளவாக 2,77,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள நிலையில், வைரஸ் பரவலைத் தடுக்க விமான நிலையங்களில் விசேட வெப்பமானி சோதனைகள் (Temperature Screening) மற்றும் மருத்துவக் கண்காணிப்புக் குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. வௌவால்கள் மற்றும் பன்றிகள் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், எத்தகைய அவசர நிலைமையையும் எதிர்கொள்ளச் சுகாதாரத் துறை முழுமையான தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது மேலும் உறுதி அளித்துள்ளார்.

 

 

Exit mobile version