2027 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள 99ஆவது ஒஸ்கார் விருது விழாவின் சர்வதேசத் திரைப்படப் பிரிவில் (International Feature Film Category) போட்டியிடுவதற்காக, இலங்கையின் சிறந்த திரைப்படத்தைத் தெரிவு செய்யும் பணிகளை இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனம் உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இதற்காக இலங்கை தேசிய ஒஸ்கார் தெரிவுக்குழு (NOSCSL) என்ற பிரத்யேக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தெரிவுக்குழுவில் திரைத்துறை சார்ந்த தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் சினிமா விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 9 நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
குழு உறுப்பினர்களில் 89 சதவீதமானோர் தற்போது திரைத்துறையில் மிகத் தீவிரமாக இயங்கி வருபவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி ஒஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திரைப்படங்களின் கால அளவு 40 நிமிடங்களுக்கு மேல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 50 சதவீதத்திற்கும் அதிகமான வசனங்கள் ஆங்கிலம் அல்லாத மொழியில் (சிங்களம் அல்லது தமிழ்) இருக்க வேண்டும்.
மேலும் ஒக்டோபர் 1, 2025 முதல் செப்டம்பர் 30, 2026 வரையிலான காலப்பகுதியில், இலங்கையின் வணிக ரீதியான திரையரங்குகளில் தொடர்ந்து 7 நாட்கள் திரையிடப்பட்டிருக்க வேண்டும்.
திரைப்படத்தின் மொத்த முதலீட்டில் 51 சதவீதத்திற்கும் அதிகமானது இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் அல்லது இலங்கைப் பிரஜையுடையதாக இருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களுக்கான அழைப்பு 2026 ஒகஸ்ட் மாதம் விடுக்கப்படும்.
தகுதியுள்ள தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தெரிவு செயல்முறை மிகவும் வெளிப்படையாகவும், பக்கச்சார்பற்ற முறையிலும் நடைபெறுவதை உறுதிசெய்யத் தேசிய ஒஸ்கார் தெரிவுக்குழு உறுதிபூண்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட திரைப்படம் அறிவிக்கப்படும் வரை உறுப்பினர்கள் அனைவரும் இரகசியம் காக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது ஏற்படும் சட்டச் சிக்கல்கள் அல்லது முறைகேடுகளைத் தவிர்க்க, அந்தந்த இடங்களிலுள்ள காவல்துறையினர் மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுடன் இணைந்து உரிய பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.