பழையதை விட கொடூரமானது புதிய சட்டம்! – சுமந்திரன் காட்டும் அதிர்ச்சி பின்னணி: அரசாங்கத்தின் தந்திரமா?

26 6975d4c6eca6a

இலங்கை அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது (ATA/PSTA), ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் மிக மோசமான அடக்குமுறை சரத்துக்களைக் கொண்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

1979-இல் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட பழைய சட்டம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதே அநியாயம் எனக் கருதப்படும் நிலையில், அதனையும் விஞ்சும் வகையில் ஒரு ‘கொடூரமான’ சட்டத்தை அரசாங்கம் வடிவமைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மக்கள் போராட்டங்களை நசுக்குவதையும், மாற்றுக்கருத்துடையோரை ஒடுக்குவதையுமே இந்தச் சட்டம் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்தச் சட்ட நகர்வுக்குப் பின்னால் ஒரு ‘தந்திரமான’ அரசியல் வியூகம் இருப்பதாகச் சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையைத் தக்கவைத்துக் கொள்ள பழைய சட்டத்தை நீக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது. இதற்காக வேண்டுமென்றே மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குக் கொடூரமான ஒரு புதிய சட்ட வரைவை அரசாங்கம் முன்வைத்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் புதிய சட்டத்தை எதிர்த்துப் போராடும்போது, அந்தப் போராட்டத்தைக் காரணம் காட்டி அரசாங்கம் புதிய வரைவை வாபஸ் பெற்றுவிட்டு, “மக்கள்தான் புதிய சட்டத்தை எதிர்க்கிறார்கள்” எனக் கூறி பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தையே நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்ள முயல்வதாகச் சுமந்திரன் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.

 

 

Exit mobile version