புகையிரதத்தில் மோதி உயிரிழந்த மாடு ஒன்றை வெட்டி இறைச்சிக்காக விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் நேற்று(5) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
மன்னார்-மதவாச்சி தள்ளாடி பகுதியில் நேற்றுமுன்தினம்(4) இரவு புகையிரதத்தில் மோதிய மாடு ஒன்றை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மீட்டு , குறித்த மாட்டை வெட்டி உயிலங்குளம் பகுதியில் விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகரிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதிக்குச் சென்ற பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் மாட்டினை வெட்டி இறைச்சிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இறைச்சியை மீட்டனர்.
இதன்போது சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதோடு குறித்த மாட்டு இறைச்சியும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த மாட்டு இறைச்சியை அழிக்க உத்தரவிட்டதோடு,சந்தேக நபரை பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் குறித்த மாட்டு இறைச்சி மண்ணெண்ணை ஊற்றி அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment